கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டிலை திரும்ப ஒப்படைத்து ரூ.10 பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (33), கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் வேளாண் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது நண்பர்களான ஊத்தங்கரை அருகே வெங்கடதாம்பட்டியைச் சேர்ந்த தீபன்ராஜ், இன்பசேகர், மதன் மற்றும் பாரதிராஜா ஆகியோருடன் கிருஷ்ணகிரி அருகே ஆர்.பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். மது அருந்திய பிறகு, காலி மதுபாட்டிலை கடையில் திரும்ப கொடுத்த அருண்குமார், அதற்கான ரூ.10 தொகையை கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த கோவிந்தராஜ் (48), அவரது மகன் கார்த்திக் (24) ஆகியோருக்கும் அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Advertisement
இதையடுத்து அருண்குமார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால், ஆத்திரத்தில் இருந்த கார்த்திக் அவரை சுமார் 50 மீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அருண்குமாரின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருண்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.