கர்நாடகாவில் 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி!
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 7,000-க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய சூழலை உருவாக்கியுள்ளது.மாநில சுகாதார நிபுணர்களின் தகவலின்படி, தொழில்நுட்ப முன்னேற்றம், மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை இளம் வயதினரிடையே எச்.ஐ.வி. பரவல் அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக, வீட்டை விட்டு வெளியே தங்கி கல்லூரி விடுதிகளில் கல்வி பயிலும் மாணவர்களிடம் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், சில குறிப்பிட்ட விடுதிகளில் தொற்று அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலை மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், மாணவர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் பரிசோதனை முகாம்கள் நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட நபர்களின் தெளிவான ஒப்புதல் பெறாமல் எந்த இளைஞருக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்படாது என்றும் கர்நாடக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.