ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, மனிதர்கள் மற்றும் யானைகள் இடையிலான மோதல்களை குறைக்கும் வகையில் மேலும் 100 இடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது.ஓசூர் வனக்கோட்டம் 1,492 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 10,300 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய 3 யானை வழித்தடங்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் அனைத்தும் காப்புக்காடு பகுதிகளுக்குள் அமைந்துள்ளதால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பட்டா நிலங்களுக்கு பாதிப்பு இருக்காது என வனத்துறை தெரிவித்துள்ளது.மனித-யானை மோதல்களை தடுப்பதுடன், விவசாய பயிர்களை பாதுகாக்கவும் வனத்துறை பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் யானைக் கூட்டங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்ட டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் யானைகள் குடியிருப்பு பகுதிகளை நெருங்குவதற்கு முன்பே அவற்றின் இருப்பிடத்தை கண்டறிந்து, மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மேலும், இரும்புக் கம்பி வடம் வேலிகள் அமைத்து யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைவதும் தடுக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வராமல் கண்காணிக்க 20-க்கும் மேற்பட்ட பயிர்சேத தடுப்புக் குழுக்கள் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.ஊடேதுர்கம் வனப்பகுதியில் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது யானைகள் ரெயில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
Advertisement
2003-ம் ஆண்டில் 5 யானைகளும், 2013-ம் ஆண்டில் 3 யானைகளும் ரெயில் விபத்தில் உயிரிழந்தன. இதையடுத்து அந்த பகுதியில் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்த கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட வனக்கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, தேவையான தகவல்கள் ரெயில்வே துறையுடன் பகிரப்பட்டு வருகின்றன. இதன் மூலம் யானைகள் ரெயில் விபத்தில் சிக்குவது குறைந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.இதேபோல், வனப்பகுதிகளில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது 71 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், யானைகள் ரெயில் விபத்தில் சிக்குவதை தடுப்பதற்கும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கும் இந்த கண்காணிப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 100 இடங்களில் புதிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் புதிய கேமராக்களை பொருத்தும் பணிகள் தொடங்கும் என தெரிவித்தனர்.