எம்எஸ்எம்இ நிறுவனங்களின் தாமதக் கட்டணப் பிரச்சினைகளுக்கு தீர்வு
எம்எஸ்எம்இ எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகைகள் தாமதமாக செலுத்தப்படுவது தொடர்பான 65 பிரச்சினைகளுக்கு குறைதீர்க்கும் மன்றங்கள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், தெலங்கானா மாநில வர்த்தகத் துறை ஆணையரகம் சார்பில் தாமதமான பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நிரந்தர குறைதீர் மன்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.இந்த மன்றங்களின் மூலம் மொத்தம் ரூ.8.29 கோடி மதிப்பிலான 65 தாமதக் கட்டணப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதில் குறு, சிறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நுகர்வோர், பொதுத்துறை நிறுவனங்கள், மாற்று வழி தகராறு தீர்வு அமைப்புகள், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம்மற்றும்தெலங்கானா அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு பணம் தாமதமாக கிடைப்பது என்பது விலைப்பட்டியல் தொகையைப் பெறுவதில் ஏற்படும் சிக்கலாக மட்டும் கருத முடியாது.
அது ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குதல், மூலப்பொருட்களை வாங்குதல், கடன் தவணைகளைச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும். மேலும், புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் திறனிலும் இதன் தாக்கம் ஏற்படலாம்.இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் சுமூகமான முறையில் தீர்வு காணப்படுவது, எம்எஸ்எம்இ நிறுவனங்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.