எப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: பி.வில்சன் வலியுறுத்தல்
வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், FCRA திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை என்றாலும், அதை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.மசோதாவை நாடாளுமன்ற அளவில் விரிவாக ஆய்வு செய்யவும், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்கவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கவலைகளை முழுமையாக பரிசீலிக்கமுடியும்என்றும்தெரிவித்துள்ளார்.முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேயப் பணிகள், சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தொடக்கத்திலிருந்தே மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று தங்கள் அமைப்பு வலியுறுத்தி வந்ததாக பி.வில்சன் கூறியுள்ளார். அதே நேரத்தில், மாற்று நடவடிக்கையாக மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி, தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியதாக தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக தங்கள் அமைப்பு நடத்திய நடவடிக்கைகள் அமைதியான முறையிலும், ஜனநாயக வழியிலும், அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம், அப்போதைய தமிழக முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், FCRA திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியதை பி.வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார். ஏப்ரல் 16-ம் தேதி தனது தலைமையில் டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை மன்றம் நடத்திய தேசிய அளவிலான இணையவழி ஆலோசனையில், நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற மற்றொரு தேசிய அளவிலான தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், கூட்டு நடவடிக்கை மன்றத்தின் அழைப்பை ஏற்று ஜூன் 28-ம் தேதி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், கிறிஸ்தவ குடும்பங்கள் மற்றும் மிஷன் அமைப்புகள் சார்பில் தேசிய பிரார்த்தனை மற்றும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.