உலகளவில் ரூ.255.63 கோடி வசூல் குவித்த 'ஜனநாயகன்'... முதல் வார சாதனை
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகராக நீண்ட காலம் ரசிகர்களின் ஆதரவை பெற்ற விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக பணியாற்றி வருகிறார். அரசியலில் முழு நேர கவனம் செலுத்தும் நோக்கில் அவர் நடித்த இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கடந்த 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.படம் வெளியீட்டுக்கு முன்பும், வெளியான பின்னரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. குறிப்பாக, திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது. இருப்பினும், விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற உணர்வால் ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை வரவேற்று வருகின்றனர்.தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வெளியான முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை படம் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில், படம் வெளியான முதல் ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.255.63 கோடி வசூல் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.174.63 கோடியும், வெளிநாடுகளில் ரூ.81 கோடியும் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து நீடித்து வருவதால், அடுத்தடுத்த நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் உயரக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.