உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி: பெண் சேமித்து வைத்த ரூ.12 லட்சம் பணத்தை கடித்து குதறிய எலிகள்
உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில், பெண் ஒருவர் பல ஆண்டுகளாக சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த சுமார் ரூ.12 லட்சம் பணத்தை எலிகள் கடித்து நாசமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகவும், தங்க நகைகள் வாங்குவதற்காகவும் அந்தப் பெண் நீண்ட காலமாக பணத்தை சேமித்து வந்துள்ளார். தனது சேமிப்புத் தொகையை வீட்டில் இருந்த பழைய இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது.சமீபத்தில் நகை வாங்குவதற்காக பணத்தை எடுக்க அந்தப் பெட்டி திறக்கப்பட்டபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகள் அனைத்தும் துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.பெட்டியில் இருந்த ஓட்டை வழியாக உள்ளே சென்ற எலிகள், சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கடித்து சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது.
தங்களது பல ஆண்டுகால சேமிப்பு பாழானதை பார்த்த அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.கிழிந்துபோன ரூபாய் நோட்டுகளை வங்கி மூலம் மாற்ற முடியுமா என்பது குறித்து குடும்பத்தினர் தற்போது வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று வருகின்றனர்.இதுபோன்ற சம்பவம் ஏற்கனவே அசாம் மாநிலத்திலும் நடந்துள்ளது. அங்கு ஏடிஎம் இயந்திரத்துக்குள் புகுந்த எலிகள், ரூ.12 லட்சத்துக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகளை கடித்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பணத்தை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான வங்கி கணக்குகளில் சேமிப்பது குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.