இலவச பஸ் பயண திட்ட விரிவாக்கம்: சேலத்தில் தனியார் பஸ் ஓட்டுநர்கள் போராட்டம்
சேலத்தில் பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தவெக சார்பில் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயண வசதி ஏற்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, இந்த வாக்குறுதிகள் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே நிலவியது.இந்நிலையில், சட்டசபையில் நேற்று பேசிய முதல்-அமைச்சர் விஜய், ‘அன்னப்பூரணி சூப்பர் 6’ திட்டத்தின் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், பொங்கல் பண்டிகை முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தார்.அதேபோல், ‘வெற்றி பயணம்’ திட்டத்தின் கீழ் பெண்கள் மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்களிலும், மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்துக்கான புறநகர் (மப்சல்) பஸ்களிலும், மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களிலும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.இந்த இலவச பயணத் திட்ட விரிவாக்கத்துக்கு தனியார் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.