ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் 9 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், படகை இயக்கிய மீனவர் ஏற்கெனவே ஒருமுறை கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக கைதானதால் அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Advertisement
மற்ற 8 மீனவர்களையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, விடுதலையான 8 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அவசரகால பயண ஆவணங்களை வழங்கிய இந்திய தூதரக அதிகாரிகள், விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த 8 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, வாகனம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.