தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “சிக்மா”. தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நூலகம் நடத்தி வரும் சந்தீப் கிஷன், பல்வேறு கடன் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார். வாங்கிய கடனுக்கான வட்டியைக் கூட செலுத்த முடியாத சூழலில், இறுதியில் தனது நூலகத்தையும் இழக்கிறார். இதையடுத்து, தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்து ஒரு கிளப்புக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் பண மோசடி குறித்து அவர் அறிந்து கொள்கிறார். அதற்கான முக்கிய ஆதாரமாக ஒரு பென்டிரைவ் அவரிடம் கிடைக்கிறது. அந்த பென்டிரைவைக் கொண்டு கிளப் உரிமையாளரிடம் பணம் கேட்டு பேரம் பேசுகிறார் சந்தீப் கிஷன். இதற்கிடையில், அந்த பென்டிரைவைக் கைப்பற்றுவதற்காக ஆந்திராவில் இருந்து சம்பத் தலைமையிலான குழு வருகிறது. பென்டிரைவில் இருப்பது என்ன? அதை கைப்பற்றுவதற்காக ஒரு கும்பல் ஏன் அலைகிறது? அதன் பின்னணியில் இருக்கும் பிரச்சினைகளை சந்தீப் கிஷன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக்கதை. சந்தீப் கிஷன் தனது இயல்பான நடிப்பால் படத்தை தாங்கிச் செல்கிறார்.
Advertisement
தாயின் கனவை நிறைவேற்ற அவர் எதிர்கொள்ளும் சிரமங்கள் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளன. வழக்கமான கலகலப்பான நடிப்புடன், ஆக்சன் காட்சிகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். கதாநாயகியாக வரும் பரியா அப்துல்லா தனது கதாபாத்திரத்தில் ஓரளவு கவனம் ஈர்க்கிறார். சம்பத், ராஜூ சுந்தரம், ஷிப் பண்டிட், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தமனின் இசையும் படத்தின் வேகத்துக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. பரபரப்பான காட்சிகள் திரைப்படத்தின் முக்கிய பலமாக இருக்கின்றன. அதேவேளை, சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இல்லாமல் பார்த்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. வழக்கமான அடிதடி பின்னணியிலான கதையாக இருந்தாலும், அதில் சில புதுமையான அம்சங்களை இணைத்து, நேர்த்தியான திரைக்கதையுடன் படத்தை பரபரப்பாக நகர்த்தியுள்ளார் அறிமுக இயக்குனர் ஜேசன் சஞ்சய். குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தின் பரபரப்பை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன.