Skip to main content
🌤️ —°C
புதன் | 26 ஆகஸ்ட் 2026 | 10 ஆவணி பராபவ வருடம்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்: கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது - அன்பில் மகேஸ்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்: கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது - அன்பில் மகேஸ்
ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்துள்ள முடிவு, ஆசிரியர்களின் நலனில் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் த.வெ.க. அரசு நிறைவேற்றிய தீர்மானம் குறித்து ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாளில் சென்னை ஐகோர்ட்டில், தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்தால் தேர்வின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், மறுநாளே சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பது கண்துடைப்பு நடவடிக்கையா என்ற கேள்வி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.2025-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அன்றைய முதல்-அமைச்சரின் உத்தரவின்படி உடனடியாக அறிவித்தோம். இதையடுத்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தோம். மேல்முறையீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றதுடன், என்னை நேரில் சந்தித்தும் நன்றி தெரிவித்தனர்.செப்டம்பர் 11-ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களின் கருத்துகளை அறியும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியான மறுநாளே பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். இரண்டு முறை கருத்துக்கேட்பு கூட்டங்களும் நடைபெற்றன.இதன் தொடர்ச்சியாக 2025 நவம்பர் 22-ம் தேதி அன்றைய முதல்-அமைச்சரை, நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சனுடன் சந்தித்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். ஆசிரியர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு நவம்பர் 25-ம் தேதி அன்றைய முதல்-அமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆசிரியர்களை பாதுகாப்பதோடு, மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படாத வகையில் சட்டத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மூத்த ஆசிரியர்கள் யாரும் பாதிக்கப்படாத வகையிலும், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும் தமிழக அரசு துணை நிற்கும் என்று அன்றைய முதல்-அமைச்சர் தெரிவித்தார்.நவம்பர் 29-ம் தேதி நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஏற்கனவே பணி நியமனம் பெற்று ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களின் பணியையும் பதவி உயர்வையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தியா முழுவதும் ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி, தி.மு.க.
Advertisement
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் இதுகுறித்து வலியுறுத்தினர். மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், 2025 டிசம்பர் 12-ம் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, ஆசிரியர்களின் நலனுக்காக சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர்களை பாதுகாக்கும் நோக்கில் சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என அரசாணை எண் 231, 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத தளர்வும் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஏராளமான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.2026 ஜனவரி 28-ம் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 55 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான மதிப்பெண் 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, பிப்ரவரி 25-ம் தேதி அவர்களுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பயிற்சி தொகுப்புகளை தயாரித்தல் மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில், 2026 மே 29-ம் தேதி சீராய்வு மனு மீதான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுத்தது. அதன் பின்னர் இந்த விவகாரத்தில் சட்டப்போராட்டத்தை த.வெ.க. அரசு முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.முந்தைய தி.மு.க. அரசு ஆசிரியர்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடராமல், சிறப்பு தகுதித்தேர்வுக்கான பயிற்சி கையேடுகளை வழங்குவதில்கூட தற்போதைய அரசு தாமதம் செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க முடியாது என்று ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதிடப்பட்டிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் நிலைப்பாடுதான் உண்மையானதா அல்லது நீதிமன்றத்தில் வாதிட்ட அரசின் நிலைப்பாடுதான் உண்மையானதா என கேள்வி எழுப்பியுள்ள அன்பில் மகேஸ், ஆசிரியர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு