50 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் மீண்டும் போலீஸ் சைக்கிள் ரோந்து
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் மீண்டும் சைக்கிள் மூலம் ரோந்து பணியை தொடங்கியுள்ளனர்.உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலைச் சுற்றியுள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 சித்திரை வீதிகளிலும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த வீதிகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை முறையாக அமல்படுத்துவதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கும் வகையில் போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறை தற்போது மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் காவலர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து போலீசார் சித்திரை வீதிகளில் சைக்கிளில் தொடர்ந்து ரோந்து சென்று வருகின்றனர்.சைக்கிளில் ரோந்து செல்லும் போலீசார், பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். போலீசாரின் இந்த புதிய நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.