சென்னை அசோக்நகர் பகுதியில் அழகு நிலையத்தில் பணியாற்றும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அசோக்நகரில் உள்ள பிரபல அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் அவர், தினமும் இரவு 11 மணியளவில் பணியை முடித்துவிட்டு தனியாக வீட்டுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
Advertisement
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தமிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து அசோக்நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராபின்நெல்சன் (22), கிருஷ்ணகுமார் (25), மனோகார்த்திக் (20) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, அசோக்நகர் பகுதியில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் த.வெ.க. நிர்வாகி ஆனந்த் (29) என்பவரையும் அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.