தமிழக சட்டசபை தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், செங்கோட்டையன் தாக்கல் செய்த வேட்பு மனுவை சான்றளித்த நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகியிருந்ததாகவும், எனவே அந்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றது முறையல்ல என்றும் பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, தமக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரும் மனு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் தங்களது வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செங்கோட்டையன் தரப்பிலான மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.