அதிமுக, திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டது: மதுராந்தகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, தமிழக வெற்றி கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய், மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டினார். கூட்டத்தில் பேசிய விஜய், மதுராந்தகம் தொகுதி மக்களை தனது குடும்பத்தினராக குறிப்பிட்டு, இடைத்தேர்தலில் வாக்கு கேட்பதற்காகவே வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தவெக தனிக்கட்சியாகவும், சாமானியர்களின் கட்சியாகவும் ஆட்சிக்கு வரக்கூடாதா என கேள்வி எழுப்பினார். பெண்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் ஆதரவுடன் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க தவெக ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார். தவெக குறித்து திமுகவினர் அவதூறான கருத்துகளை தெரிவிப்பதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். தான் சினிமாவில் வெற்றி பெற்றதற்கும், அரசியலில் வெற்றி பெற்றதற்கும் தமிழக மக்களே காரணம் எனக் கூறிய விஜய், கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளுக்குள் 35 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடிந்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருவதாகவும், திமுகவில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களும் பெண்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிப்பதாகவும் அவர் விமர்சித்தார். ஜெயலலிதா குறித்து தவறாக பேசியதாகக் குற்றம்சாட்டப்படும் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சி செய்தபோதே, அந்த கட்சியின் நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டதாக விஜய் கூறினார். தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதி மக்கள் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். விசில் சின்னத்திற்கு அளிக்கும் வாக்கு, பெண்களை தவறாக பேசுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், அதிமுக பாஜகவின் கிளையாக இருந்ததாகவும், தற்போது திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டதாகவும் விஜய் விமர்சித்தார்.