மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, தமிழக வெற்றி கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய், மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டினார். கூட்டத்தில் பேசிய விஜய், மதுராந்தகம் தொகுதி மக்களை தனது குடும்பத்தினராக குறிப்பிட்டு, இடைத்தேர்தலில் வாக்கு கேட்பதற்காகவே வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தவெக தனிக்கட்சியாகவும், சாமானியர்களின் கட்சியாகவும் ஆட்சிக்கு வரக்கூடாதா என கேள்வி எழுப்பினார். பெண்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் ஆதரவுடன் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க தவெக ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார். தவெக குறித்து திமுகவினர் அவதூறான கருத்துகளை தெரிவிப்பதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். தான் சினிமாவில் வெற்றி பெற்றதற்கும், அரசியலில் வெற்றி பெற்றதற்கும் தமிழக மக்களே காரணம் எனக் கூறிய விஜய், கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளுக்குள் 35 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடிந்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருவதாகவும், திமுகவில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களும் பெண்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிப்பதாகவும் அவர் விமர்சித்தார். ஜெயலலிதா குறித்து தவறாக பேசியதாகக் குற்றம்சாட்டப்படும் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சி செய்தபோதே, அந்த கட்சியின் நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டதாக விஜய் கூறினார். தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதி மக்கள் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். விசில் சின்னத்திற்கு அளிக்கும் வாக்கு, பெண்களை தவறாக பேசுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், அதிமுக பாஜகவின் கிளையாக இருந்ததாகவும், தற்போது திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டதாகவும் விஜய் விமர்சித்தார். அனுபவம் என்ற பெயரில் மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்; ஆனால் சாமானியர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே அவர்களின் எண்ணம் என்றும் அவர் கூறினார். தவெக ஆட்சிக்கு வந்தால் மக்கள் பணத்தை ஊழல் செய்ய முடியாது என்றும், மக்கள் பணத்தை தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், ஏற்கனவே தொட்டவர்களையும் விடமாட்டோம் என்றும் விஜய் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஊழல் குறித்து பேசும்போது ஆதாரங்களை கேட்பதாகவும், தன்னை பேசுமாறு கூறிவிட்டு, தான் பேச எழுந்தால் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மக்களிடம் தனது கருத்துகள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே சட்டப்பேரவையில் குரல் எழுப்ப வேண்டியுள்ளதாகவும் கூறினார். திமுகவினர் இதுவரை மக்கள் பணத்தை கையாடல் செய்யவில்லை என்றும், இனிமேலும் செய்யமாட்டோம் என்றும் கூற முடியுமா என விஜய் கேள்வி எழுப்பினார். இதுவரை ஊழல் செய்யவில்லை என்றும், இனிமேல் ஊழல் செய்யமாட்டோம் என்றும் அவர்களால் கூற முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மு.க.ஸ்டாலின் குறித்த விமர்சனங்கள் தொடர்பாக பேசிய விஜய், அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தமக்கு 'அங்கிள்' என்றும், 'ஸ்வீட் அங்கிள்' என்றும் குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் போட்டி ஒரு புறம் தவெகவும், மறுபுறம் திமுகவும் என இரு தரப்புகளுக்கு இடையிலான போட்டியாக இருப்பதாக விஜய் கூறினார். இதுவரை தாம் மட்டும் கூறிவந்த இந்த கருத்தை தற்போது திமுக தரப்பிலிருந்தும் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக போடும் கணக்குகள் பலிக்காது என்றும், தமிழக மக்களுக்கும் தனக்கும் இடையிலானது பாசக்கணக்கு என்றும் விஜய் தெரிவித்தார். இறுதியாக, மதுராந்தகம் தொகுதி மக்களிடம் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பீர்களா எனக் கேட்டு தனது உரையை நிறைவு செய்தார்.