அசாமில் வெள்ளப் பேரழிவு தீவிரம்: 24 மணி நேரத்தில் 21 பேர் பலி
அசாம் மாநிலத்தில் கனமழையால் உருவான வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மாநிலத்தின் 16 மாவட்டங்களில் 5.64 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீர்மட்டம் அபாய அளவை மீறி பாய்ந்து வருவதால், ஏராளமான கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக பல பகுதிகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் பிற அவசரகால மீட்புக் குழுக்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், அசாமின் வெள்ள நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.