அசாமில் கனமழை, வெள்ள பாதிப்பு தீவிரம்: உயிரிழப்பு 10 ஆக உயர்வு
அசாமில் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்வதால் ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அசாமுடன் சேர்ந்து நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசமும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரம்மபுத்திரா ஆறும் அதன் கிளை ஆறுகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சராய்தியோ மாவட்டத்தின் தேசங்பானி பகுதியில் பாயும் தேசங் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து, வெள்ள அபாயம் நிலவுகிறது. அதேபோல், திப்ரூகார் மாவட்டத்தின் செனிமரி பகுதியில் ஓடும் புரிதெஹிங் ஆற்றில் நீர்மட்டம் 102.66 மீட்டராக பதிவாகியுள்ளது. அங்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், கவுரங், திகோவ், தன்சிரி உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள அபாயம் நீடிக்கிறது.தற்போதைய நிலவரப்படி, அசாமின் 16 மாவட்டங்களில் உள்ள 45 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 794 கிராமங்களில் வசிக்கும் சுமார் 3.62 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிவசாகர், சராய்தியோ, ஜோர்ஹாட், திப்ரூகார், சோனித்பூர், பிஸ்வநாத், கோலாகாட், தேமாஜி, டின்சுகியா, நகாவன், கர்பி ஆங்லாங், கச்சார், உதல்குரி, சிராங், காம்ரூப் மற்றும் காம்ரூப் (மெட்ரோ) மாவட்டங்கள் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.வெள்ளநீர் பல குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பரந்த அளவிலான விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.