தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் இவர், 2016-ம் ஆண்டு வெளியான கன்னட படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’, ‘பீஷ்மா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, இந்தியில் ‘அனிமல்’ படத்திலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘புஷ்பா’ படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது பல்வேறு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், ‘மைசா’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், ‘மைசா’ பட விழாவில் பேசிய ராஷ்மிகா, படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த சவாலான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
Advertisement
‘மைசா’ படத்தின் முக்கியமான காட்சி ஒன்றுக்காக 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து குதிக்க வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார். அந்த உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்று கூறியபோது மிகவும் பயந்ததாகவும் ராஷ்மிகா கூறினார். படப்பிடிப்புக்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், 90 அடி உயரத்தில் இருந்து கீழே குதிப்பது சாதாரண விஷயம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கதாபாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்தவும், காட்சி சிறப்பாக அமையவும் அந்த சவாலை துணிந்து ஏற்றுக்கொண்டதாக ராஷ்மிகா தெரிவித்தார். 90 அடி உயர நீர்வீழ்ச்சி காட்சியில் ராஷ்மிகா நடித்திருப்பது ‘மைசா’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.