8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அப்டேட்
தமிழகத்தில் இன்று முதல் வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 15-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது. செப்டம்பர் 12: தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 13: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 14: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.