புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் தினமும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தில் உறுதியாக உள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியான முதல் வாரத்தில் தினமும் அதிகபட்சம் ஆறு காட்சிகள் திரையிட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களிலும் தினமும் ஆறு காட்சிகள் திரையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீமான், ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் திரையிட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். மக்களை அறிவிலும் திறமையிலும் மேம்படுத்த வேண்டிய அரசு, அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு வருவதை ஊக்குவிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் விமர்சித்திருந்தார். சீமானின் கருத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் தமிழ் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் திரைப்படங்கள் முன்னதாக வெளியாகும்போது, படங்கள் குறித்து பரவும் எதிர்மறையான விமர்சனங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. தயாரிப்பாளர்களின் உழைப்பு மற்றும் அவர்கள் சந்திக்கும் பொருளாதாரச் சிக்கல்களையும் சங்கம் விளக்கியிருந்தது. இந்நிலையில், அந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில் சீமான் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தயாரிப்பாளர்களின் நெருக்கடிகளையும் திரைத்துறையின் வளர்ச்சிக்கான தேவைகளையும் தாம் புரிந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமா நலிவடைய வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்றும், அது மேலும் வளர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவும் திரைப்படங்களுக்கு நிதியுதவி வழங்குவது, தரமான படங்களை அரசே வாங்கி வெளியிடுவது, இணையத்தில் திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது போன்ற திட்டங்களைச் செயல்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.
Advertisement
மேலும், திரையரங்குக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளையும் முறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தனது கட்சியின் ஆட்சிச் செயற்பாட்டு வரைவில் இடம்பெற்றுள்ள அம்சங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரத்தில், அதிகாலை காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணம் திரைத்துறைக்கு எதிரான மனப்பான்மை அல்ல என்றும் சீமான் விளக்கமளித்துள்ளார். திரைப்படங்கள் மக்களுக்கு பொழுதுபோக்கையும் சிந்தனையையும் வழங்கும் கலை வடிவம் என்றாலும், அவற்றைப் பார்ப்பவர்களின் கல்வி, உழைப்பு, வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பொறுப்புகளும் முக்கியமானவை எனக் குறிப்பிட்டுள்ளார். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுவதற்கு ஏற்கெனவே வாய்ப்பு இருக்கும் நிலையில், ஒவ்வொரு புதிய படத்தின் வெளியீட்டின்போதும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் நடத்த வேண்டுமா என்பதுதான் தனது கேள்வி எனத் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகும் சூழலில், இளைஞர்கள் ஆண்டு முழுவதும் அதிகாலை காட்சிகளுக்காகத் திரையரங்குகளில் காத்திருப்பதும், தங்களது அன்றாடப் பணிகளை ஒதுக்கிவிட்டு பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவிடுவதும் கவலை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய பொழுதுபோக்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஊக்குவிப்பது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே தனது முக்கியமான கவலை என்றும் கூறியுள்ளார். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டிய அரசின் முன்னுரிமைகள் குறித்தே தாம் கேள்வி எழுப்பியதாகவும், தயாரிப்பாளர்களின் கோரிக்கையைப் புரிந்துகொள்ளாமல் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் சீமான் விளக்கியுள்ளார். திரைத்துறையின் நலனைப் போலவே ஒட்டுமொத்த சமூகத்தின் நலனையும் கருத்தில் கொண்டே தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, அதிகாலை 6 மணி காட்சிகளுக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் முன்வைத்துள்ள காரணங்களைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கிவிட்டதால், இதற்கு மேல் கருத்து தெரிவிக்காமல் அமைதி காக்கப் போவதாகக் கூறியுள்ளார். தமிழ்த் திரையுலகமும் அதனை ஆதரிக்கும் தமிழ் மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.