3 மாதத்தில் பாலம் இடிந்தது எப்படி? – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் பாலத்தை, அப்போது தமிழக அமைச்சராக இருந்த எ.வ.வேலு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி திறந்து வைத்தார்.இதனிடையே, பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள 119 அடி உயர சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது. அணைக்கு சுமார் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அந்த நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆற்றின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டன.இந்த வெள்ளத்தில் அகரம்பள்ளிப்பட்டு-தொண்டமானூர் இணைப்பு பாலமும் சேதமடைந்தது. ரூ.16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம், திறக்கப்பட்டு மூன்று மாதங்களிலேயே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலம் இடிந்ததற்கான காரணம் குறித்து தமிழக அரசு தரப்பில் பல்வேறு விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் மரிய வில்சன், திமுக ஆட்சிக் காலத்தில் தென்பெண்ணை ஆற்றில் தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டதாகவும், அது 3 மாதங்களிலேயே இடிந்து விழுந்ததாகவும் குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட அந்தப் பாலம் 57 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்லும் அளவை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.