மராட்டிய மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் உள்ள நல்துர்க் கோட்டையில், 3 குழந்தைகளுடன் தாய் ஒருவர் கொத்தளத்தில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாராசிவ் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்துர்க் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. சுமார் 105 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட கோட்டையில் சுமார் 100 கொத்தளங்கள் உள்ளன.தாராசிவ் வன்தால் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி (30), தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தனது குழந்தைகள் அஜிங்கே (5) மற்றும் இரட்டைக் குழந்தைகளான வீரா, கிராந்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் நல்துர்க் கோட்டைக்கு வந்துள்ளார். பின்னர் குழந்தைகளை கோட்டையின் சுமார் 80 அடி உயரம் கொண்ட உப்பிலி கொத்தளத்துக்கு அஸ்வினி அழைத்துச் சென்றுள்ளார். இது கோட்டையின் உயரமான கொத்தளங்களில் ஒன்றாகும். அங்கு சென்றதால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அஸ்வினி தனது 3 குழந்தைகளுடன் கொத்தளத்தில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் கோட்டை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அங்கு விரைந்தனர். படுகாயமடைந்த நிலையில் கிடந்த அஸ்வினி மற்றும் அவரது மகன் அஜிங்கே ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மற்ற இரு குழந்தைகளான வீரா மற்றும் கிராந்தி ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
Advertisement
போலீசார் அவர்களை மீட்டு தாராசிவ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கிராந்தி உயிரிழந்தார். வீராவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அஸ்வினி தனது குழந்தைகளுடன் இவ்வாறு விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஸ்வினி மல்யுத்த விளையாட்டு வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க வீராங்கனையாக இருந்துள்ளார். "மகாராஷ்டிராவின் புலி" என்று அழைக்கப்பட்ட அவர், தேசிய அளவிலான போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களையும் 6 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரது மரணம் மகாராஷ்டிராவிலும் விளையாட்டு சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினி மராட்டிய பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பணியை ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே, தனது மகள் கணவர் மற்றும் மாமியார் தரப்பினரால் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அஸ்வினியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் புகார்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அஸ்வினியின் கணவர், மாமியார் மற்றும் மாமனார் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.