3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய இயக்குநர் பதவிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த கே.பி. கார்த்திகேயன், புதிதாக உருவாக்கப்பட்ட பேரூராட்சிகள் இயக்குநர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை இதற்கு முன்பு வகித்து வந்த பிரியங்கா, தற்போது மின்னணு ஆளுமை முகமையின் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமையின் முதன்மைச் செயல் அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக அவர் கவனிப்பார் என அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, வெளிநாட்டு அயல் பணியை நிறைவு செய்து தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ள பி. விஷ்ணு சந்திரன், கே.பி. கார்த்திகேயனுக்குப் பதிலாக தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி. விஷ்ணு சந்திரனின் நியமனத்திற்கு அயல் பணி தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாக பொருந்தும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட பேரூராட்சிகள் இயக்குநர் பதவியானது, சமூக நலத்துறை இயக்குநர் பதவிக்கு இணையான தகுதி கொண்டதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.