சீனாவில் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறாவிட்டால் உறுப்பினர் கட்டணத்தை முழுமையாகத் திருப்பி வழங்கும் புதிய திட்டத்தை டேட்டிங் செயலி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் திருமண விகிதம் தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், திருமணத்திற்காக தீவிரமாகத் துணையைத் தேடுபவர்களை ஈர்க்கும் வகையில் அந்நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த வித்தியாசமான சலுகையை அறிவித்துள்ளது. ஷென்சென் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'லியாங்பெய் ஏஐ' (Liangpei AI) என்ற டேட்டிங் செயலி, உறுப்பினர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறவில்லை என்றால், அவர்கள் செலுத்திய 2,000 யுவான் கட்டணத்தை முழுமையாகத் திரும்ப வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இந்தத் தொகை சுமார் ரூ.28,155 ஆகும். ஒரே நேரத்தில் ஒருவருடன் மட்டுமே உரையாடும் வசதி பொதுவாக டேட்டிங் செயலிகளில் பலருடன் ஒரே நேரத்தில் தொடர்புகொள்ள முடியும். ஆனால், இந்தச் செயலியில் ஒரே சமயத்தில் ஒருவருடன் மட்டுமே பேசும் வகையில் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அந்த நபருடனான தொடர்பு முடிந்த பின்னரே மற்றொரு வரனைத் தேர்வு செய்து பேச முடியும். மேலும், செயலியில் பதிவு செய்யும் நபர்களிடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுமார் 20 நிமிடங்கள் உரையாடுகிறது. இந்த உரையாடலின் மூலம் அவர்களின் குடும்பச் சூழல், வாழ்க்கை குறித்த எதிர்கால இலக்குகள் மற்றும் துணையைப் பற்றிய எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அறிந்து, அதற்கேற்ற பொருத்தமான நபரை பரிந்துரைக்கிறது.
Advertisement
திருமணமானவர்கள் பதிவு செய்வதைத் தடுக்க நடவடிக்கை செயலியில் திருமணமாகாதவர்கள் மட்டுமே இணைய வேண்டும் என்பதற்காகப் பல்வேறு சரிபார்ப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பயனர்கள் தங்களுடைய உண்மையான பெயர், புகைப்படம் மற்றும் திருமணமாகாதவர் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஷென்சென் நகரில் திருமணப் பதிவு செய்த 150 தம்பதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், நிறுவனத்தின் நிறுவனர் ஜெங் சின்சுன் இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளார். 2026 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது சீனாவின் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2029 ஜூலையில் முதல் கட்ட சோதனை வழக்கமான டேட்டிங் செயலிகளின் பயன்பாட்டில் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்பை மாற்றும் நோக்கில் இந்தப் புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் நடைபெறாவிட்டால் பணத்தைத் திருப்பித் தரும் அறிவிப்பு சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்ததுடன், பல்வேறு விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. 2026 ஜூலையில் தொடங்கப்பட்ட இந்தச் செயலியின் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் 2029 ஜூலை மாதத்தில்தான், பணத்தைத் திரும்ப வழங்கும் உத்தரவாதத்தின் முதல் கட்டம் பரிசோதிக்கப்பட உள்ளது.