Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 31 அக்டோபர் 2026 | 14 ஐப்பசி பராபவ வருடம்

1,431.5 கிலோ ராட்சத பூசணிக்காய் ஹாலோவீன் விளக்காக மாற்றம்: அமெரிக்காவில் புதிய கின்னஸ் சாதனை

1,431.5 கிலோ ராட்சத பூசணிக்காய் ஹாலோவீன் விளக்காக மாற்றம்: அமெரிக்காவில் புதிய கின்னஸ் சாதனை

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சேலம் நகரில், 1,431.5 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூசணிக்காய் ஹாலோவீன் விளக்காக செதுக்கப்பட்டு புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. ஹாலோவீன் பண்டிகையையொட்டி உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட கலைப்படைப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தைச் சேர்ந்த பிரபல விவசாயி ரான் வாலஸ் தனது பண்ணையில் இந்த ராட்சத பூசணிக்காயை வளர்த்துள்ளார். கடந்த 27-ம் தேதி நடைபெற்ற சாதனை அங்கீகாரத்தின்போது, 3,156 பவுண்டுகள் (1,431.5 கிலோ) எடை கொண்ட இந்த பூசணிக்காய் உலகின் மிகப்பெரிய பூசணிக்காயாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. இதையடுத்து, அதனை பிரம்மாண்டமான ஹாலோவீன் விளக்காக மாற்ற அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டனர். இதற்காக 'ரைசிங் கேன்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் டாட் கிரேவ்ஸ் தலைமையிலான குழுவினர், திறமையான சிற்பிகளுடன் இணைந்து செதுக்கும் பணியை மேற்கொண்டனர். சுமார் 32 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றி, பல்வேறு நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இந்த விளக்கு உருவாக்கப்பட்டது.

Advertisement
இதில் எலும்புக்கூடுகள், மாந்திரீகவாதி, பறக்கும் வௌவால்கள் உள்ளிட்ட உருவங்கள் முப்பரிமாண வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, 2023-ம் ஆண்டு டிராவிஸ் கீங்கர் உருவாக்கிய 1,246.9 கிலோ (2,749 பவுண்டுகள்) எடையுள்ள ஹாலோவீன் விளக்கு உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய விளக்கு, பழைய சாதனையை விட சுமார் 184 கிலோ அதிக எடை கொண்டதாக அமைந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சேலம் காமன் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விளக்கைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து ரசித்தனர். சேலம் நகரின் 400-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்தக் கலைப்படைப்பு இடம்பெற்றது. ஹாலோவீன் கொண்டாட்டங்கள் முடிவடைந்த பின்னர், பூசணிக்காயை வீணாக்காமல் பண்ணை விலங்குகளுக்கு உணவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு