வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. தேனி மாவட்டத்தின் நீர்வளத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் இந்த அணை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வைகை அணையின் நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் 20 அடியாக குறைந்தது. இதனால் அணையை ஆதாரமாகக் கொண்ட குடிநீர் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மேலும், வழக்கமாக ஜூன் மாதத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதற்கிடையே கேரளாவில் பெய்த திடீர் கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து தேனி மாவட்ட பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.அந்த தண்ணீர் வைகை அணைக்கு வந்து சேரத் தொடங்கியதால், அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 35.79 அடியாக அதிகரித்து, அணை கடல் போல் காட்சியளிக்கிறது.நீர்மட்டம் மேலும் படிப்படியாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.