விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு... கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடு
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கி அட்லூரியின் புதிய படமான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவையும், நவின் நூலி படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா, தன்னைவிட 20 வயது இளைய பெண்ணை காதலிக்கும் கதைக்களம் கொண்டிருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி கோவையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.