சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், தமிழகத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்துப் பேசினார். மேலும், அரிசி விலையைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் ரேஷன் கடைகளுக்கு முக்கியஇடம் உண்டு. வரிசையில் நின்று ரேஷன் பொருட்களை வாங்கிய அனுபவத்திலிருந்துதான் இன்று அமைச்சர் என்ற நிலைக்கு வந்துள்ளேன். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி வரத்து குறைந்திருப்பதே விலை உயர்வுக்குக் காரணம் என்று நான் தெரிவித்திருந்தேன். ஆனால், எனது கருத்தை முழுமையாகக் கேட்காமல் சிலர் எனக்குச் சவால் விடுகின்றனர். 2023ஆம் ஆண்டில் ஒரு கிலோ அரிசி ரூ.53-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே 2024ஆம் ஆண்டில் ரூ.60 ஆகவும், 2025ஆம் ஆண்டில் ரூ.65 ஆகவும் உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு படிப்படியாக அதிகரித்துள்ளன. இந்த விவரங்களை முன்னாள் அமைச்சர்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.
Advertisement
கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் பொன்னி அரிசியின் அளவு குறைவாக உள்ளது. பொதுமக்கள் பெரும்பாலும் சன்ன ரக அரிசியையே பயன்படுத்துகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் 25 ஆயிரம் மெட்ரிக் டன் சன்ன ரக அரிசியை 250 அமுதம் அங்காடிகள் வாயிலாக விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் செயல்படும் அமுதம் அங்காடிகளில் உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான பொருட்களும் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வியாபாரிகள் உணவுப் பொருட்களைக் கிடங்குகளில் பதுக்கி வைப்பதால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற பதுக்கல் நடவடிக்கைகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக விலைவாசி கண்காணிப்புக் குழுவுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார்.