விஜய்யை சந்தித்து தவெகவில் இணைய உள்ள பிரபல மலையாள நடிகர்? கேரளாவில் முக்கிய பதவி வழங்கப்படுமா?
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், பிரபல மலையாள நடிகர் தேவன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தேவன், தமிழில் ‘பாட்ஷா’, ‘வாத்தியார்’, ‘ஆதி’, ‘சிவகாசி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு ‘கேரளா மக்கள் கட்சி’ என்ற கட்சியை தேவன் தொடங்கினார். பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு, அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.சுமார் 2 ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்த தேவன், கடந்த 17-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
கடுமையாக உழைத்தபோதிலும் தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறி அவர் பாஜகவில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய தேவன், வரும் 10-ம் தேதி சென்னை வந்து முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு கேரளாவில் தவெக மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.