சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி, பயணிகள் பிரிவில் அதிக வருவாய் பெற்ற நாட்டின் ரெயில் நிலையங்களில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.ரெயில்வே துறையில் நவீன கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், ரெயில் சேவைகளின் இயக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று தெற்கு ரெயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கடந்த நிதியாண்டில் பயணிகள் பிரிவில் அதிக வருவாய் ஈட்டிய நாட்டின் முதல் 10 ரெயில் நிலையங்களின் பட்டியலில் சென்னை சென்டிரலும் இடம்பெற்றுள்ளது.
Advertisement
இந்த பட்டியலில் ரூ.3,337 கோடி வருவாயுடன் டெல்லி ரெயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா ரெயில் நிலையம் ரூ.1,692 கோடி வருவாயுடன் 2-வது இடத்திலும், சென்னை சென்டிரல் ரூ.1,299 கோடி வருவாயுடன் 3-வது இடத்திலும் உள்ளன.சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் பெற்றுள்ள இந்த வருவாய் நிலை, ரெயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை வெளிப்படுத்துகிறது.இவ்வாறு ஜாபர் அலி தெரிவித்தார்.