விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது தாயும் பலத்த காயமடைந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் மேட்டமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இப்பகுதியில் உள்ள பழைய வீடு ஒன்றில் செல்வம் - சோலையம்மாள் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் முத்துசெல்வி (17), சின்னக்காமன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நள்ளிரவில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கனமழையின் காரணமாக வீட்டின் நடுப்பகுதியில் இருந்த பக்கவாட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த முத்துசெல்வி இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார்.
Advertisement
அவரது தாய் சோலையம்மாளின் காலிலும் சுவர் விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டது. வீட்டிலிருந்து எழுந்த அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டனர். பின்னர், ஆட்டோ மூலம் அவர்களை சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மாணவி முத்துசெல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த சோலையம்மாளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனமழையால் ஏற்பட்ட இந்த விபத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.