சென்னையில் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மேயர் பிரியா ஆய்வு செய்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், 21.10.2026 அன்று திரு.வி.க.நகர் மண்டலத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பேசின் பாலம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாநகராட்சியின் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் தடையின்றி வெளியேறுவதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
Advertisement
இதையடுத்து, ரிப்பன் கட்டட வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெறும் கண்காணிப்புப் பணிகளை மேயர் பார்வையிட்டார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது மண்டல அலுவலர் சதீஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.