வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான யு.எப்.பி.யு. (UFBU), வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கி ஊழியர் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கையும் தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. ஊழியர் சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், வங்கி ஊழியர்களின் நலனுக்காக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, வங்கிச் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், திட்டமிடப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியர்கள் கைவிட வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.