உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி, பல ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்த நிலையில், அதைச் சுற்றி குவிந்திருந்த குப்பைகளை அகற்ற மட்டும் ரூ.18 கோடி செலவிடப்பட்டுள்ளது. காசியாபாத் முஸ்தபாபாத் பகுதியில் ‘அரசு மாதிரி ஆண்கள் இன்டர் கல்லூரி’ என்ற பெயரில் 10 வகுப்பறைகளுடன் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. ஆனால், அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. பின்னர் பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்தபோது, அதன் சுற்றுப்பகுதியில் உள்ளூர் நகராட்சி சார்பில் அதிக அளவிலான குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன், சுகாதாரப் பிரச்சினையும் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களால் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை நீடித்தது.
Advertisement
இதையடுத்து, பள்ளியை பயன்பாட்டுக்கு கொண்டு வர காசியாபாத் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளில், பள்ளியைச் சுற்றி குவிந்திருந்த சுமார் **1.75 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் பயோ-மைனிங் முறையில் அகற்றப்பட்டன. இந்த குப்பைகளை அகற்றுவதற்கான பணிக்கு மட்டும் ரூ.18 கோடிசெலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்ட செலவான ரூ.3 கோடியை விட, குப்பைகளை அகற்றுவதற்காக 6 மடங்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது. பள்ளி கட்டுமானத்தைக் காட்டிலும் குப்பை அகற்றும் பணிக்கே அதிகளவில் அரசு நிதி செலவிடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் வகுப்புகளை தொடங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.