ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்: மத்திய அரசு முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி
ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பயன்பாட்டுக்கான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 15-ஆம் தேதிக்குப் பிறகு, கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் வழியாக மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு, பரிவர்த்தனை மதிப்பில் 0.40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தனிநபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிமாற்றங்களுக்கும், ரூ.2,000-க்கும் குறைவான வணிகப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யுபிஐ மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக பணம் பெறும் சிறு வணிகர்களுக்கும் இந்தக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000-க்கும் அதிகமான தொகைக்கு பொருட்களை வாங்கும் பொதுமக்களிடம் இந்தக் கட்டணம் நேரடியாக வசூலிக்கப்படாது. வணிகர்களிடமே கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், தனிநபர்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை. அதேபோல், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் வணிகப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சிறு வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. இருப்பினும், இதன் தாக்கம் பொதுமக்களுக்கு மறைமுகமாக ஏற்பட வாய்ப்புள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ரூ.300 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை பெரிய வணிகர்கள் ஏற்றுக்கொண்டு தங்களது லாபத்தை குறைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், அதற்கு பதிலாக பொருட்களின் விலையை உயர்த்தி அந்தச் சுமையை மக்களிடம் கொண்டு செல்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.