ராமேசுவரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான விசைப்படகையும் விடுவிக்கக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து 5-வது நாளாக இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி எடின் புரோகர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்தப் படகைப் பறிமுதல் செய்ததுடன், அதிலிருந்த எபிஸ்டன், மத்தியா, ஜான்ஜெய்சன், ஸ்டீவன்சன், சுபார்டன், அபிஸ்டன், மோபிஸ், அந்தோணி பிரதீப், அந்தோணி புரூடஸ் ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், இந்தியா - இலங்கை இடையே இருநாட்டு மீனவர்களுக்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ராமேசுவரம் மீனவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.