Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 16 அக்டோபர் 2026 | 30 புரட்டாசி பராபவ வருடம்

“ராமாயணா” படம் இந்தியக் கதையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் முயற்சி: நடிகர் யாஷ்

“ராமாயணா” படம் இந்தியக் கதையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் முயற்சி: நடிகர் யாஷ்

இந்தியாவின் பாரம்பரியக் கதையை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே ‘ராமாயணா’ திரைப்படத்தின் நோக்கம் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். இப்படத்தை உலகளவில் வெளியிடுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார். வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை மையமாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். மேலும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாகத் தயாராகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். முன்னதாக வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், சமீபத்தில் வெளியான புதிய டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புதிய டிரெய்லரில் ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான மோதல் பிரம்மாண்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், தீமையை ஒழித்து ராவணனை வீழ்த்துவதாக உறுதியேற்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில், படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை எனச் சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், ‘ராமாயணா’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.

Advertisement
இதில் பங்கேற்ற நடிகர் யாஷ், சமூக வலைதளங்களில் படத்தைச் சுற்றி எழுந்துள்ள விவாதங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், “சமூக வலைதளங்களில் படத்தின் விஎஃப்எக்ஸ், இசை மற்றும் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு குறித்து பலரும் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருவதைப் பார்க்கிறேன். உலக அரங்கில் நமது இடத்தைப் பெற முயற்சி செய்யும்போதெல்லாம், நமக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளால் மோதிக்கொள்கிறோம். இது ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பிரித்தாளும் அணுகுமுறையை நினைவுபடுத்துகிறது. இப்படித் தொடர்ந்து நமக்குள் மோதிக்கொண்டிருந்தால், சர்வதேச அளவில் வலுவான போட்டியாளராக நம்மால் உருவெடுக்க முடியாது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ராமருக்கு முக்கியத்துவம் உண்டு. ராமர் அனைவருக்கும் பொதுவானவர். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா என எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நமது கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல ஒருவர் உண்மையான முயற்சியில் ஈடுபடும்போது, நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அந்த முயற்சியின் நோக்கம் சரியாக இருக்கும்போது, தனிப்பட்ட கருத்து மோதல்களைக் கடந்து, ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் படத்தை ஏன் சர்வதேச அளவில் வெளியிட வேண்டும், இந்தியாவில் வெளியிட்டால் மட்டும் போதாதா என்றும் சிலர் கேட்கிறார்கள். நமது கலாச்சாரத்தின் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. அதே நேரத்தில், நம்மிடம் இருக்கும் திறனையும், நாம் உண்மையில் யார் என்பதையும் உலக நாடுகள் அறிந்துகொள்ள வேண்டும். இது ஒரு திரைப்படத்தை உருவாக்குவதுடன் முடிந்துவிடும் முயற்சி அல்ல. இந்தியக் கதையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி” என்று யாஷ் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு