மேகதாது அணை திட்டத்தில் கர்நாடகம் தீவிரம்: திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தாக்கல்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை அமைக்கும் திட்டத்துக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் மீண்டும் சமர்ப்பித்துள்ளது. இந்தத் திட்டத்தால் 8.90 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேகதாதுவில் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணையை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி நீரைக் குறிக்கும். இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கையில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அவற்றை சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.இதையடுத்து தற்போது திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், மேகதாது திட்டத்தால் சுமார் 12,500 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக தட்சிண கன்னடா, சிவமொக்கா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு ஒதுக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேகதாது பகுதியில் திட்டப் பணிகளுக்காக மொத்தம் 8.90 லட்சம் மரங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் 7 லட்சம் மரங்கள் சிறிய வகையைச் சேர்ந்தவை என்றும், 1 லட்சம் மரங்கள் பெரிய மரங்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.மேகதாது அணை மூலம் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி. நீர் பயன்படுத்தப்படும் என்றும் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்துள்ளார். எனினும், அறிக்கையில் இடம்பெற்றுள்ள முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.மேகதாது திட்டத்துக்கு 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் அடிக்கல் நாட்ட கர்நாடக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஏற்கனவே தனி அலுவலகம் அமைத்து, அதிகாரிகள் குழுவையும் நியமித்துள்ளது. அந்தக் குழுவினர் திட்டம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.