கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் 19-ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகமும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது. இந்த திருத்தத்தை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18-ம் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நகலில் இந்த திருத்தம் இடம்பெறவில்லை என்றும், அதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடத்தப்படாமலேயே தீர்மானத்தில் சேர்க்கப்பட்டதாகவும் வாதிட்டார். மேலும், திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை என்றும், ஆனால் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றபோது, சபாநாயகர் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
Advertisement
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூன் 19-ம் தேதி சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகளை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். அதில், எதிர்க்கட்சித் தலைவரின் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டதும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் திருத்தத்துடன் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு எடுத்ததும் சுட்டிக்காட்டப்பட்டது. திருத்தம் முன்வைக்கப்பட்டபோது சட்டசபையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சட்டசபை நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்க அரசியல் சாசனம் தடை விதிப்பதாகவும், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சட்டசபையின் இறுதி முடிவாக கருதி அதற்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.