சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதேபோல், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார்.
Advertisement
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். சென்னை மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், சைதாப்பேட்டையில் முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.