முதல்வர் அலுவலகத்தை மாற்ற ரூ.6 கோடிக்கு மேல் செலவிடுவதா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
முதல்வர் அலுவலகத்தை 10-வது தளத்திற்கு மாற்றுவதற்காக ரூ.6.17 கோடி செலவிடப்படுவதாகக் கூறி, தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன்கடும்விமர்சனம்தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மாற்றத்தை கொண்டு வருவேன், புதிய அரசியலை உருவாக்குவேன்” என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்வரின் நிலைப்பாடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்துள்ள தகவல்கள் மூலம் குறுகிய காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழக மக்கள் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக போராடி வரும் சூழலில், முதல்வர் ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை 10-வது தளத்திற்கு மாற்றுவதற்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து ரூ.6.17 கோடி செலவிடுவது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.ஒருபுறம் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் தற்காலிகமாக முதல்வர் அலுவலகத்தை மாற்றுவதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட வேண்டிய அவசியம் என்ன என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.தலைமைச் செயலக கோட்டையில் ஏற்கனவே போதிய வசதிகள் உள்ள நிலையில், அலுவலகத்தை மாற்றுவதற்காக ரூ.6 கோடிக்கு மேல் செலவு செய்வது எந்த வகையில் நியாயமானது என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.மேலும், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைக்க போதிய கிடங்குகள் இல்லாமல், மழையில் நனைந்து நெல் வீணாகி வருவதாக வேதனை தெரிவித்து வரும் நிலையில், தற்காலிக அலுவலகத்துக்காக இவ்வளவு தொகையை செலவிடுவது சரியா என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.“மாற்றம் என்பது மக்களின் வாழ்க்கையில் ஏற்பட வேண்டுமே தவிர, முதல்வரின் அலுவலகத்தில் ஏற்பட வேண்டியதல்ல” எனக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், ஆடம்பரமான செலவுகளை தவிர்த்து, அந்த நிதியை தமிழக மக்களின் நலனுக்கான பயனுள்ள திட்டங்களில் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்தியுள்ளார்.