தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை, தற்போது ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக உள்ள நிலையில், இனி ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தும் வகையில் தஞ்சாவூர், கோவை, நெல்லை, மதுரை மற்றும் விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் செலவில் புற்றுநோய் சிகிச்சைக்கான தலைமை மையம் உருவாக்கப்படும்.மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.84 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் அமைக்கப்படும். பெரம்பூரில் ரூ.300 கோடி செலவில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த ரூ.106.17 கோடி ஒதுக்கப்படும்.தரமான மருத்துவ சேவைகளை உறுதி செய்யும் நோக்கில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் 6,098 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட உள்ளன.
Advertisement
இதில் 660 பி.எஸ்.சி. செவிலியர் இடங்கள், 1,925 செவிலியர் கல்லூரி இடங்கள், 2,778 துணை மருத்துவப் படிப்பு இடங்கள் மற்றும் 735 மருத்துவியல் இடங்கள் இடம்பெறும்.தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ சேவைகள் பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோயை கட்டுப்படுத்தவும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தரமான சிகிச்சை வழங்கவும், ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் "முதல்-அமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு" (Chief Minister's Cancer Care Mission) திட்டம் மேம்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.