மராட்டியத்தில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து: 6 பேர் பலி, மீட்புப் பணிகள் தீவிரம்
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்திருந்த நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 முதல் 7 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.பாலாஜி நகர் பகுதியில் உள்ள ‘கோஹினூர்’ என்ற இந்த குடியிருப்பு கட்டிடம் நள்ளிரவில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் மொத்தம் 48 குடியிருப்புகள் இருந்ததாகவும், விபத்து நேரத்தில் பலர் கட்டிடத்துக்குள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எப்.), மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.