மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இதுவரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் கூறினார். விழா நடைபெறும் நாட்களில் முதல்-அமைச்சர் ஏற்கனவே திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கும்பாபிஷேக விழாவிலேயே அதிகளவில் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், முதல்-அமைச்சரின் வருகை கூடுதல் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.இதனிடையே, கும்பாபிஷேக விழாவுக்கான கூட்ட நெரிசல் மேலாண்மை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல் துறை, மின்சார வாரியம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்த QR குறியீடு இடம்பெற்ற ஹாலோகிராபிக் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதற்கான முழுமையான அட்டவணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.மேலும், பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் விரிவான சி.சி.டி.வி. கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். குறைந்தது 8,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிட வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. கோவில் முக்கிய வளாகத்துக்குள் செல்ல முடியாத பக்தர்கள் விழா நிகழ்வுகளை காணும் வகையில் பொது இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.