மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ந்தேதி வாக்குப்பதிவு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக போட்டியிட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. எனினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்தது. விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டிருந்தார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி உள்பட 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.இந்த நிலையில், திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.