மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக போட்டியிட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. எனினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்தது. விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டிருந்தார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி உள்பட 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.இந்த நிலையில், திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதித்தது. சட்டமன்ற தொகுதி ஒன்று காலியானால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். ஐகோர்ட்டின் தடையுத்தரவு காரணமாக 5 தொகுதிகளைத் தவிர்த்து, தற்போது மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, இத்தொகுதிகளில் அரசின் புதிய திட்டங்கள் அல்லது நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும், புதிய அரசு அறிவிப்புகளை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.மேலும், தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையும் இந்தஇருதொகுதிகளிலும்அமல்படுத்தப்படுகிறது.வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படையினரும் வர உள்ளனர். டெல்லியில் இருந்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் பணியில் ஈடுபட உள்ளனஇதனிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் அந்தந்த கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, அதன்பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.