மதிப்புமிக்க அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் தொடரும் பெங்களூரு: சென்னை அணிக்கு எந்த இடம்..?
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு தொடர்பாக சர்வதேச முதலீட்டு வங்கி நிறுவனமான ஹூலிஹான் லோகி 2026-ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 300 மில்லியன் அமெரிக்க டாலர் பிராண்ட் மதிப்பை கடந்த முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.இந்தியாவில் கடந்த 19 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தற்போது 10 அணிகள் பங்கேற்று வருகின்றன. அண்மையில் நடைபெற்ற தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது 2-வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆய்வறிக்கையின்படி, ஐபிஎல் தொடரின் மொத்த வணிக மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.4 சதவீதம் உயர்ந்து 20.6 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.97 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இதன் மூலம் புதிய உச்சத்தை ஐபிஎல் எட்டியுள்ளது.
மேலும், ஐபிஎல் சந்தை மதிப்பு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உலகளவில் அமெரிக்காவின் என்.எப்.எல். தொடருக்கு அடுத்தபடியாக அதிக மதிப்புமிக்க விளையாட்டு லீக்காக ஐபிஎல் தொடர்கிறது.விராட் கோலி இடம்பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிராண்ட் மதிப்பு 16 சதவீதம் உயர்ந்து 312 மில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.2,986 கோடி) உயர்ந்துள்ளது.
இதன்மூலம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடந்த முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையையும் அந்த அணி பெற்றுள்ளது.இந்த சீசனில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தாலும், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இருப்பதன் பலத்தால் அதன் பிராண்ட் மதிப்பு 9.1 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.2,526 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் அந்த அணி மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் 2-வது இடத்தை தக்க வைத்துள்ளது.முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வணிக ரீதியான வலுவான செயல்பாடுகளின் காரணமாக 7.9 சதவீத வளர்ச்சியுடன் சுமார் ரூ.2,345 கோடி பிராண்ட் மதிப்பை எட்டி, 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.மறுபுறம், கடந்த மூன்று சீசன்களாக லீக் சுற்றை தாண்ட முடியாத நிலையும், மகேந்திர சிங் டோனியின் பங்களிப்பு இல்லாத சூழலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வளர்ச்சியை பாதித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இதனால் அந்த அணியின் பிராண்ட் மதிப்பு 3.8 சதவீதம் உயர்ந்து சுமார் ரூ.2,335 கோடியாக இருந்தாலும், மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது இடத்துக்கு சரிந்துள்ளது.