மண்டல பூஜை நிறைவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் இரவு வரை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், நாள் முழுவதும் சுவாமி மற்றும் அம்மன் சன்னதி கதவுகள் மூடப்படாமல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 17-ந்தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக நாளில் சுவாமியை தரிசிக்க முடியாதவர்கள், அதன்பின்னர் நடைபெறும் மண்டலாபிஷேக காலத்தில் தரிசனம் செய்தால் கும்பாபிஷேகத்தை நேரில் கண்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கு மறுநாளான 18-ந்தேதி முதல் மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கின. இந்த பூஜைகள் அக்டோபர் 2-ந்தேதியான நேற்று நிறைவு பெற்றன. மண்டலாபிஷேக நிறைவு நிகழ்ச்சிக்கான பூஜைகள் நேற்று முன்தினம் மாலை தொடங்கின. சுவாமி சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி அருகே யாகம் வளர்க்கப்பட்டு, 4 பிரதான கலசங்களில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் நடைபெற்றன. நேற்று 2 கால பூஜைகள் நிறைவடைந்த பின்னர், காலை 9.30 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 4 பிரதான கலசங்களுடன், அம்மன் மற்றும் சுவாமிக்கு தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த 108 கலசங்களையும் சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து உச்சிகால பூஜையின்போது, 108 கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனிதநீரைக் கொண்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
Advertisement
இதன் மூலம் மண்டல பூஜை நிறைவு பெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கே கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் திரளத் தொடங்கினர். வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்ட நிலையில், கோவில் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதல் தொடர்ந்து பக்தர்கள் வந்துகொண்டிருந்ததால், சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகள் மூடப்படாமல் தரிசனம் தொடர்ந்து நடைபெற்றது. சித்திரை வீதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 4 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் அதிகாலை முதல் இரவு வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், காலை 11 மணிக்குப் பிறகு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றில், பக்தர்களின் வசதிக்காக மதிய நேரத்திலும் சன்னதியை மூடாமல் தொடர்ந்து திறந்து வைத்தது இதுவே முதல் முறை என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.