மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? பிரேமலதா கேள்வி
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியினர் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25-ம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி., உயர்மட்டக்குழு உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும், செயல்படுத்த முடியாத திட்டங்களுக்கு ஏன் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையாக ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை அந்தத் தொகை வழங்கப்படாதது ஏன் என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பினார்.